Tuesday, 19 March 2013

பம்பரம்

விளையாட்டப் பத்தி விளையாட்டா ஏதாவது எழுதணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். திடீர்னு பாத்தா நம்ம சின்ன புள்ளையா இருக்கும்போது ஆடுன வீர விளையாட்டு எல்லாம் ஞாபகத்துக்கு வந்திடுச்சு பம்பரம் ஆட்டத்தப் பத்திச் சொல்லிடுரேன்....

ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு ஆட்டம் நடக்கும் நம்ம ஊருல. கொஞ்ச நாளு கோலிக்கா வச்சு ஆடிக்கிட்டு திரியுவோம் நாங்க. திடீர்னு பாத்தா கையில பம்பரமும் கையுமா அலையுவோம். பம்பரத்தைச் சுத்த விட்டு அப்படியே பம்பரக் கயித்தால அப்படியே சுன்டி தூக்கி பிடிச்சு'கோஸ்'னு சொல்லுவோம்.

பம்பரம் கடையில் வாங்கும்போது ஆணியோடத்தான் வரும். ஆனா அந்த ஆணியை வச்சுக்கிட்டு ஒரு பயலும் விளையாட மாட்டான். பம்பர வெலைல பாதி குடுத்து கொல்லர் கடைக்குப் போயி ஆணி புதுசா வைப்போம் ஆணின்னா உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்ல. 'ஆக்கர்' போடுறதுக்காகவே நாலு முக்கு ஆணிய நல்லா இழைச்சு கூர்மையா வச்சுக்கிட்டு பம்பரத்துல குத்துனா குத்துற குத்துல ரெண்டா உடஞ்சு ஓடும் பம்பரம். ஆண்ட்ருஸ் இதுல பெரிய கில்லாடி.அது வேற யாரும் இல்லைங்க நான் தான்

ஆட்டம் எப்படித் தொடங்கும் தெரியுமா? மொதல்ல எல்லா பயலுவளும் பம்பரத்தைக் கயித்துல சுத்தி தயாரா இருப்போம். ஒண்ணு ரெண்டு மூணு சொன்னதும் பம்பரத்தைச் சுத்த விட்டு யாரு கோஸ் எடுக்குறாங்களோ அவங்க தப்பிச்சாங்க. கடைசியா கோஸ் எடுத்தவன் பம்பரம் மட்டும் சின்ன வட்டத்துக்கு மத்தியில வந்து வைக்கணும். இந்தப் பம்பரத்து மேல குத்தி அந்தப் பம்பரத்தை வட்டத்துக்கு வெளிய எடுக்கணும்.(நம்மள மாதிரி ஒப்புக்குச் சப்பாணியா ஆடுறவன் வட்டத்துக்குள்ள ஓரமா குத்துனாலும் போதும்) பம்பரம் வெளிய வந்துட்டா, வந்ததுமே பழையபடி எல்லாரும் கோஸ் எடுக்கணும். அப்ப எவன் கடைசியா கோஸ் எடுக்குறானோ அவன் பம்பரம் உள்ள இருக்கணும். இதுதான் அடிப்படையான ஆட்டம்.

இதுல இன்னொரு விசேசம் இருக்கு. பம்பரம் குத்தும்போது வட்டத்துக்கு உள்ளேயே பம்பரம் ஆடிக்கிட்டு நின்னுச்சுன்னா, அதை உள்ள பம்பரம் வச்சிருக்குறவன் காலால 'அமுக்கிப் போடு அமாவாசையை'ன்னு சொல்லிக்கிட்டே அமுக்கணும். அதுக்குள்ள ஆடுற பம்பரத்தை எவனாவது வெளிய எடுத்துட்டா தப்பிச்சிடலாம். இப்படி காலால அமுக்கிடக் கூடாதுங்குறதுக்காக இன்னொரு ஏற்பாடும் செய்வோம். பம்பரத்துக்கு மேலயும் ஆணி. நமக்கு வேண்டப்படாதவன் அப்படி ஆணியோட வந்தா, 'மேல ஆணி வச்சுக்கிட்டு என்ன மயித்துக்குடே வெளயாட வருதே?'ன்னு கிண்டல் செஞ்சுட்டு, நாங்க மட்டும் மேலயும் கீழயும் ஆணி வச்சுக்கிட்டு விளையாடுவோம் 

மேலே ஆணி வைக்குறதுல இருக்குற வசதி என்னன்னா நம்ம பம்பரம் வட்டத்துக்கு உள்ள சுத்துனாலும் ஒருபயலும் அமுக்கிப் போடு அமாவாசை சொல்ல மாட்டான். உணர்ச்சிவசப்பட்டு அமுக்குனா, கால்ல குத்தி கட்டுப் போட்டு அவனை ஊட்டுக்குள்ள அமுக்கிப் போட வச்சுடுவோம்லா. 

பம்பரம் குத்தும்பொதே உள்ள இருக்குற பம்பரத்தோட செரட்டையில் குத்தி அதுல ஆழமா பள்ளம் போடுததுக்குப் பேருதான் ஆக்கர் போடுறது.எவ்வளவு ஆக்கர் வாங்குதானோ அவ்வளவு கேவலமான விளையாட்டு விளையாடுதான்னு அர்த்தம். ஆனா, என் பம்பரம் எப்பவும் புதுசா பளபளப்பாவே இருக்கும். ஏன்னா என் பம்பரத்துல ஆக்கர் போட்டான்னா அவன் முதுகுல ஆக்கர் போடுததுக்கு நாலு பேரு எப்பவும் தயாரா வச்சிருப்போம்.(பம்பர தாதான்னு வச்சுக்குங்க)

இப்ப இந்த விளையாட்டெல்லாம் கிராமத்துல கூட விளையாட மாட்டுக்குறானுங்கனு நினைச்சாலே கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு...

No comments:

Post a Comment